'

கல்வி அமைச்சின் ஊடக மாநாட்டு முடிவுகள் - 19 ஜூன் 2022விடைத்தாள் மதிப்பீடு, பாடசாலை நடாத்தல், கல்வி அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சை ஆணையாளர் நாயகம் ஆகியோரின் ஊடக மாநாட்டில் தெரிவித்த கருத்துகள் மற்றும் நேரடி இணைப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
 
முக்கிய விடயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரம் (ஜூன் 20 தொடக்கம் 24 வரை)
  • கொழும்பு வலய மற்றும் நகர்ப்புற பாடசாலைகள் மூடப்படும்
  • நகர்ப்புரமற்ற பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் போக்குவரத்து சிரமம் இன்று வருகை தர முடியுமாயின் அப்பாடசாலைகள் வலயக் கல்வி அலுவலகத்துக்கு அறிவித்து விட்டு பாடசாலைகள் நடாத்தப்பட முடியும்.
  • ஆசிரியர்கள் பாடசாலை வரவில்லை எனின் விடுமுறை பதியப்படமாட்டாது. இக்காலப் பகுதி விடுமுறை காலப்பகுதியாகும். தன்னார்வ சேவை அடிப்படையிலேயே அதிபர் ஆசிரியர்களின் பணி எதிர்பார்க்கப்படுகின்றது.
  • அனைத்து பாடசாலைகளும் மேற்படி காலத்தில் நடைபெற்ற முக்கிய விடயங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான பதிவுகளை கட்டாயம் பேணுதல் வேண்டும்.
  • ஈ தக்சலாவ, தேசிய கல்வி நிறுவகத்தின் யூடியுப், நெனச தொலைக்காட்சி சேவைகளில் நடைபெறும் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பில் மாணவர்களை ஈடுபடுத்தல்
  • ஆகஸ்ட் விடுமுறை குறைக்கப்படும்
  • 2022 உயரதர பரீட்சைக்கு முகங்கொடுக்கும் மாணவர்களுக்கான விசேட செயற்றிட்டங்கள், பயிற்சிப் பரீட்சைகள், கருத்தரங்குகள் தேசிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு நடாத்தபடும்.
  • எஞ்சியுள்ள காலங்களில் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான தேர்ச்சிகளை நிறைவு செய்து கொள்வது தொடர்பில் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு தேசிய ரீதியில் அனைத்து ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கும் நடாத்தப்படும்.


விரிவான விடயங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது

கல்வி அமைச்சர்
கடந்த 2021, 2021 வருடங்களில் கொரோனா காரணமாக பாடசாலைகள் நடைபெற்ற காலங்கள் மிகக் குறைவாகும்.

மேற்படி காலங்களில் ஆசிரியர்கள், அதிபர்கள் மாற்று வழிகளை பிரயோகித்தனர்.

இதன் போது, கிராமப் புற பாடசாலைகளில் மாணர்கள் கஸ்டத்தை அனுபவித்தனர்.

மாணவர்களின் பாடசாலை தினங்கள் மற்றும் பாடவிதானத்தை குறைப்பதற்கு நாம் விரும்பவில்லை

நேற்று (18.06.2022) நடைபெற்ற கலந்துரையாடலில், மாகாண ரீதியிலான தகவல்கள் திரட்டப்பட்டன.

கடந்த வௌ்ளிக்கிழமை பாடசாலைகள் விடுமுறை வழங்கப்பட்டாலும், கிராமப்புற பாடசாலைகள் நடைபெற்றுள்ளன.

நகர்ப்புற பாடசாலைகள் விசேட நேர அட்டவணை மூலம் நிகழ்நிலையில் கற்பிக்க நகர்ப்புற பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தயாராகவுள்ளனர். மாணவர்களுக்காக சுயமாக மேற்படி பணியினை மேற்கொள்ள அவர்கள் தயாராக உள்ளனர் என்பதை அறிவித்துள்ளார்கள்.

கிராமப்புறங்களில் உள்ள  போக்குவரத்து பிரச்சினைகள் இல்லாத பாடசாலைகள் வலயக்கல்வி அலுவலகத்துக்கு அறிவித்து நடாத்தலாம்.

போக்குவரத்து பிரச்சினைகள் உள்ள ஆசிரியர்கள் லீவு தொடர்பில் கவலை அடையத் தேவையில்லை. மேற்படி பணியானது தன்னார்வ அடிப்படையில் ஆசிரியர்கள் சுயமாக கடமைக்கு வருவதால் லீவு பிரச்சினைகள் ஏற்படாது.

எதிர்வரும் காலங்கள் அத்தியாவசிய கற்றலுக்கு மாத்திரமே முன்னுரிமை அளிக்கப்படல் வேண்டும்.

நெனச கல்வி  தொலைக்காட்சி  மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் யூடியுப் மற்றும் ஈ தக்சலாவ கற்றல் முகாமைத்துவ தொகுதி என்பன இக்காலப்பகுதியில் கற்றலுக்கு பயன்படுத்த முடியும்.

ஆகஸ்ட் தவணை விடுமுறை தினங்கள் குறைக்கப்படலாம்.

ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கு விசேட திட்டங்கள் மற்றும் பயிற்சி நாடு முழுவதிலுமுள்ள அனைத்து ஆசிரியர்களுக்குமாக நிகழ்நிலையில் பயிற்சிகள் வழங்கப்படும். எதிர்காலத்தில் எஞ்சியுள்ள தினங்களில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கற்றல் - கற்றித்தல் விடயங்களை எவ்வாறு நிறைவு செய்து கொள்வது என்பது தொடர்பாக பயிற்சி மற்றும் வழிகாட்டல் வழங்கப்படும்.

ஜூலை மாதத்தில் உயர்தர மாணவர்களுக்கான விசேட செயலமர்வுகள் தேசிய ரீதியில் நடைபெறும்.


கல்வி அமைச்சின் செயலாளர்
ஆசிரியர்களின் தற்காலிக இடமாற்றம் தொடர்பாக கருத்துகள் முன்வைத்தார்.

இவ்வருட இறுதி வரை தற்காலிக இணைப்புகள் வழங்கப்படும்.  மாணவர்களுக்கும் நகர்ப்புற பாடசாலைகளுக்கு செல்ல கடினம் எனின், தற்காலிக அடிப்படையில் அருகிலுள்ள பாடசாலைகளுக்கு செல்ல முடியும்.

இக்காலத்தில் விசேட அறிக்கைகளை பேணல் வேண்டும். முக்கிய விடயங்கள் தொடர்பிலான பதிவுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

பரீட்சை ஆணையாளர் நாயகம்
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பாக,

எரிபொருள் பிரச்சினை காரணமாக பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. மதிப்பீட்டு பணிகளை பின்போட முடியாது. எனவே எரிபொருள்  நிலைய உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களிடம் பணிவாக வேண்டிக் கொள்வது,

குறித்த மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை உரிய காலத்தில் வௌியிட்டு. அவர்களின் கற்றல் செயற்பாடுகள் தொடராக நடைபெற உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன். 

எரிபொருள் பிரச்சினை காரணமாக சில மதிப்பீட்டு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பல பிரச்சினைகளுக்கு மத்தியில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு வழங்க வரும் ஆசிரியர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தயவு செய்து குறித்த ஆசிரியர்களின் எரிபொருள் தேவைப்பாடு தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிக் கொள்கின்றன். குறித்த பரீட்சை நடவடிக்கைகள் 6 மாதங்கள் தாமதமாகியுள்ளது. குறித்த மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படையாமல் இருப்பதற்கு, குறித்த ஆசிரியர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்ள இடமளிக்குமாறு பொதுமக்களிடம் வினயமாக கேட்டுக் கொள்கின்றேன்.