'

சமூக வலைத்தளங்களினூடு பணமோசடி செய்த நபர் கைது




சமூக வலைத்தளங்களினூடாக வைத்தியராக தன்னை இனங்காட்டிக் கொண்டு, பெண்களிடம் பணமோசடி செய்த நபரொருவர் கடந்த ஜூலை 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மக்களின் அவதானத்திற்காக இச் செய்தி மொழிபெயர்க்கப்படுகின்றது.

மலாவி நாட்டிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்னர் வருகை தந்த நபர் தொடராக இம்மோசடியை செய்து வந்துள்ளார்.

ஐரோப்பிய நாட்டின் வைத்தியராக தன்னை இனங்காட்டிக் கொண்டு, இங்குள்ள பெண்களுடன் நட்பை வளர்த்துக் கொண்டு திருமணம் முடிப்பதற்காக விருப்பத்தை தெரிவித்து, குறித்த பெண்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவதாக கூறி, தங்க நகைகள், ஐ போன் என்பவற்றை வாங்கி அவற்றின் படங்களை பிடித்து, அவற்றை பொதி செய்து அதனையும் புகைப்படம் எடுத்து  அனுப்புவதுடன், அப்பொதியில் டொலர் தாள்களையும் இட்டு அதை குரியர் சேவை மூலம் அனுப்புவதாக அறியப்படுத்துகிறார்

தான் குரியர் செய்து விட்டதாக சொல்லி சில தினங்களில் , குறித்த பெண்ணுக்கு உள்நாட்டு குரியர் சேவை ஒன்றின் பெயரை சொல்லி பார்சல் ஒன்று வந்திருப்பதாக தொலைபேசி அழைப்பு வருகின்றது.

அதை சுங்கத்திடம் இருந்து விடுவிக்க ஒரு இலட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். எமக்கு குறித்த பணத்தை வைப்பிலிடுங்கள். இல்லா விட்டால் பார்சலை எமக்கு விடுவிக்க முடியாது என்ற அறிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் முகநூல் காதலருக்கு தெரிவிக்கப்பட, குறித்த பொதியிலும் பணம் இருக்கின்றது. எனவே கையிலிருக்கும் பணத்தை வைப்பிலிட்டு பார்சலை பெற்றுக் கொள்ளுமாறு அவர் கூறுகிறார்.

பணத்தை வைப்பிலிட்டதும், மீண்டும் அழைப்பு வருகின்றது. உங்களது பார்சல் அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்டது. அதில் அதிக பணம் இருப்பதால் வரி கட்ட வேண்டும். அதற்கு மூன்று இலட்சம் கட்ட வேண்டும் என்பதாக அறிவிகக்கப்படுகின்றது.

குறித்த பொதியில் 50, 60 இலட்சம் பெறுமதியான பொருள்கள் இருப்பதாக நம்பிக் கொண்டு குறித்த பெண் பல கட்டங்களில் மொத்தமாக ஆறரை இலட்சம் ரூபாய் கட்டியதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளார்.

அவரின் முறைப்பாட்டுக்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வித் திணைக்கள அதிகாரிகள்,  குறித்த நபர் ஐரோப்பாவில் இருப்பதாக பொய்யைக் கூறி உள்நாட்டில் இருந்து கொண்டு இம்மோசடி செய்தமை கண்டு பிடித்துள்ளரனர். குறித்த நபர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

இவ்வாறாக பல பெண்களிடம் மோசடி செய்து, பாரியளவு பணமோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

போதைப் பொருள்களுக்கு அடிமையாகியவர்களிடம் 50000 ரூபாய் பணத்தைக் கொடுத்து, வங்கிக் கணக்குகள் உருவாக்கி, அவற்றின் ஏடிஎம் அட்டைகளை தான் வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்பிலிட செய்து, ATM அட்டை மூலம் உடனடியாக பணத்தை எடுத்துள்ளார்.

குழுவாக மேற்கொள்ளப்பட்டுள்ள இம்மோசடி தொடர்பில் ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

- நன்றி தினமின-