'

அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய போட்டிப் பரீட்சை


இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (4) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக இன்றைய டேய்லி நியூஸ் நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.

அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இலங்கை அதிபர் சேவையின் தரம் மூன்றில் புதிய நியமனங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன்,  இதன்படி, புதிய ஆட்சேர்ப்புகளுக்காக இதுவரை இடம்பெற்று வந்த நடவடிக்கைக்குப் பதிலாக பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி உரிய நியமனங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2024 ஜனவரிக்குள் பரீட்சைகளை நடத்தி, உரிய விடைத்தாள்களை மதிப்பீடு செய்த பின், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நேர்காணலை நடத்தலாம் என்றார்.

மூலம் - டேய்லி நியூஸ் 05.08.2023