'

தொலைகாட்சி நாடகங்களும், பிள்ளைகளும்

நாம் பிள்ளைகள் தொடர்பில் மிக, மிக அவதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக இச்செய்தி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


தொலைகாட்சியில் ஔிபரப்பப்பட்ட பிரபல நாடகமொன்றின் இரண்டு பிரபலங்களை கண்டு கொள்வதற்காக இந்தியாவிற்கு செல்ல வீட்டை விட்டு வௌியேறிய பெண் பிள்ளைகள் 3 பேரை பொலிஸார் அடையாளம் கண்ட செய்தி சிங்கள நாளிதழான தினமின வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெற்றோரின் முறைப்பாட்டை அடுத்து, மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகளின் பின்னர் குறித்த மாணவிகள் பொலிஸாரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்

இவ்வாறு பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஹொரவ்பதான பிரதேசத்தைச் சேர்ந்த 8, 12, 13 வயதுடைய பெண் பிள்ளைகள் மூவராவர்

31 ஆம் திகதி அதிகாலை 4.30 க்கு பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வௌியேறிய இவர்கள் காட்டு யானைகள் நடமாடக்கூடிய பகுதியினூடாக ஏறத்தாழ 2 கிலோமீட்டர்கள் நடந்து சென்று , திருகோணமலை - யாழ்ப்பாணம் பஸ்ஸில் ஏறியுள்ளனர். இடையில் மீண்டும் ஒரு பஸ்ஸில் ஏறியுள்ளனர்.

தாம் பிழையான திசையில் செல்வதை உணர்ந்து, மீண்டும் ஹொரவ்பதான நகருக்கு வந்து யாழ்ப்பாண பஸ் நிறுத்தப்படும் இடத்தில் இருந்த பொழுது, காலை 10.30 மணியளவில் பொலிஸாரினால் கண்டறியப்பட்டனர்.

நீண்ட நாட்களாக குறித்த பிரபலத்தை பார்க்க திட்டமிட்டதாகவும், அவர்கள் இந்தியாவில் இருப்பதை அறிந்து கொண்டதாகவும், இந்தியாவுக்கு செல்ல அதற்கருகில் யாழ்ப்பாணம் இருப்பதை அறிந்து கொண்டு அங்கு சென்று, அங்கிருந்து படகில் இந்தியா செல்ல திட்டமிட்டதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.

தொலைபேசி மூலம் இடங்களை தேடியறிந்து கொண்டதாகவும், இதற்காக நீண்ட நாட்களாக பணம் சேகரித்து வந்ததாகவும் மேற்படி சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.